மாசி மகம் அன்று, கடலாடும் வைபவம் மிக விசேஷம். மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக் கடலாட்டு கண்டான் கபாலிச்சரம் அமர்ந்தான்... என, மாசி மகத்தன்று கடலாடுவதின் சிறப்பு குறித்து பாடுகிறார் திருஞான சம்பந்தர்.
ஒரு முறை, இரண்யவர்மன் என்ற மன்னன், மாசி மகக் கடலாடுவதின் சிறப்பு குறித்து, வியாக்ரபாத முனிவரிடம் கேட்டான். மனித ஜீவன்களின் பாவக் கட்டுகளை அழிக்கவல்லது என்று கூறி, அதன் சிறப்பு குறித்து, அவனுக்கு விளக்கினார் வியாக்ரபாத முனிவர். அது...
வரம் பல பெற்ற, கொடூர குணம் கொண்ட மன்னன் ஒருவனை வெல்வதற்கான வழியைப் பற்றி ஆலோசிப்பதற்காக, வருண பகவானைத் தேடி, அவனின் குரு போனார்.
இருள் சூழ்ந்த நேரம் அது!
'யாரோ பகைவன் தான் வருகிறான்...' என, தவறாக நினைத்த வருணன், தன் பாசத்தை அவர் மேல் வீச, குரு இறந்தார்.
குருவைக் கொன்ற பாவம், ஒரு பிசாசாகத் தோன்றி, வருணனின் கை, கால்களை கழுத்தோடு சேர்த்துக் கட்டி, கடலில் தள்ளியது.
வருணன் அங்கேயே கிடந்து, நீண்ட காலமாகத் துன்பத்தை அனுபவித்தார்.
இதனால், தேவர்கள், சிவபெருமானை வணங்கி, 'இறைவா... வருணனின் துயரத்தை நீக்கி அருள் செய்யுங்கள்...' என வேண்டினர்.
சிவபெருமானும் அவர்கள் வேண்டுகோளுக்கு இரங்கி, வருண பகவானின் கட்டுகளையெல்லாம் அறுத்து, அவருக்கு விடுதலை அளித்தார்.
விடுதலை பெற்ற வருண பகவான், கடலிலிருந்து வெளிப்பட்டு, சிவபெருமானை வணங்கி, 'கண்ணுதல் கடவுளே... தாங்கள் எழுந்தருளி அடியேனுக்கு விடுதலை அளித்த இந்த மாசி மக திருநாளில், இத்துறையில் (கடலில்) நீராடியவர்களின் துயரக் கட்டுகளையெல்லாம் நீக்கி, அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும். மேலும், பரம் பொருளான தாங்களும், மாசி மக நன்னாளில், இத்துறையில் (கடலுக்கு) எழுந்தருள வேண்டும்...' என வேண்டி, வரம் பெற்றார் என, மாசி மக கடலாடுவதின் சிறப்பு குறித்து, வியாக்ரபாதர் சொல்லி முடிக்கவும், இரண்யவர்மன் மகிழ்ச்சியோடு, சிதம்பரத்தில் கோவில் கொண்டிருக்கும் சிவபெருமானுக்கு கொடியேற்றினார்.
கடலுக்குச் செல்லும் வழி அலங்கரிக்கப்பட்டது; சிவபெருமான் கடலுக்குள் எழுந்தருளினார். வருண பகவான் எதிர் வந்து நமஸ்கரித்தார்.
வருணனின் பாசத்தை நீக்கி அருளிய அலையில், திருமஞ்சனமாடிய (நீராடிய) சிவபெருமான், பக்தர்களுக்கு அருள்புரிந்து, கனகசபைக்குள் புகுந்தார்.
வருணனின் பாசமறுத்த அந்த இடம், 'பாசமறுத்த துறை...' என்று பெயர் பெற்று விளங்குகிறது. சிதம்பரத்தில் இருந்து ஏறத்தாழ, 1.5 கி.மீ., தொலைவில், இத்துறை உள்ளது. இங்கு, மாசி மக தீர்த்தோற்சவம் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
மாசி மகக் கடல் நீராட்டம் செய்தால், நம் மனதில் ஆரோக்கிய நீரோட்டம், நிரம்பி வழியும்!
பி.என்.பரசுராமன்
திருமந்திரம்!
செல்லும் அளவில் செலுத்துமின் சிந்தையை
வல்ல பரிசால் உரைமின்கள் வாய்மையை
இல்லை எனினும் பெரிதுளன் எம் இறை
நல்ல அரன்நெறி நாடுமின் நீவிரே
கருத்து: முடிந்த அளவு, மனதை நல்வழியில் செலுத்துங்கள்; இயன்ற அளவு உண்மையையே பேசுங்கள். இறைவன் இல்லை என்பாருக்கும், இறைவன் இருக்கிறான். அதனால், பாவங்களை போக்கும் அந்தப் பரமனை நாடி, நல்வழியில்
செயல்படுங்கள்.
No comments:
Post a Comment